பாராட்டுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள்
பிள்ளைகளைப் பாராட்டுவதால் அவர்களுக்கு எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாகக் குழந்தைகளைப் பாராட்டுவதன் மூலம் நாம் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கலாம். இருப்பினும் சில ஆய்வுகள் இந்தக் கூற்று அவ்வளவு சரியானதன்று என்கின்றன.
பாராட்டுத் திறனா? முயற்சியா?
ஓர் ஆய்வில் (Mueller CM & Dweck CS, 1998) ஆராய்ச்சியாளர்கள் 10 முதல் 11 வரை வயதுடைய மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்துப் புதிர்ப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு கூறினார். முதல் குழுவினர் அவர்களின் புத்திசாலித்தனத்திற்காகவும் திறமைக்காகவும் பாராட்டு பெற்றனர். ஆனால் இரண்டாவது குழுவினர் அவர்களின் புத்திசாலித்தனத்திற்காகப் பாராட்டு பெறாமல் முயற்சிக்காக மட்டுமே பாராட்டு பெற்றனர். ஆராய்ச்சியாளர்கள் பார்வையிட்டதில் முதல் குழுவில் உள்ள மாணவர்கள் எளிதான புதிர்ப்போட்டியில் கலந்து கொள்ள நினைக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் குழுவில் உள்ள மாணவர்கள் மிகவும் கடினமான புதிர்ப்போட்டியில் கலந்து கொள்ள நினைக்கின்றனர் என அறியமுடிகிறது.
பின்னர், இரண்டு குழுக்களுக்கும் கடினமான புதிர்ப்போட்டிகள் கொடுக்கப்பட்டன. இதன் வழி, இரண்டு குழுக்களும் மாறுபட்ட நடத்தையை வெளிக்காட்டினர். தங்களின் முயற்சிக்காகப் பாராட்டு பெற்ற இரண்டாவது குழுவில் உள்ள மாணவர்களால் சவாலை எதிர்கொள்ள முடிந்தது. தங்களின் புத்திசாலித்தனத்திற்காகப் பாராட்டு பெற்ற முதல் குழுவில் உள்ள மாணவர்கள் வெற்றி அடைவதற்காக சவாலைப் புறந்தள்ளுகின்றனர். அவர்கள் வெற்றியடைவதையே இலக்காகக் கொண்டுள்ளனர். தங்களது முயற்சிக்காகப் பாராட்டுப் பெற்ற மாணவர்களுடன் ஒப்பிடும்போது தங்களின் புத்திசாலித்தனத்திற்காகப் பாராட்டுப் பெற்ற மாணவர்களிடம் சவாலை எதிர்கொள்ளும் திறனும் படைப்புத் திறனும் குறைவாகவே காணப்படுகின்றன.
பாராட்டுவதன் மூலம் ஏற்படும் விளைவுகள்
தங்களின் புத்திசாலித்தனத்திற்காகப் பாராட்டு பெற்ற மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று ஆய்வு வலியுறுத்துகிறது. அவர்களைப் புத்திசாலி என வகைப்படுத்தியவுடன் எந்தவொரு முயற்சியாக இருந்தாலும் தோல்வியே நேர்ந்திடும் என்று நினைத்து ஆர்வத்தைக் காட்டவில்லை. முயற்சிக்காகப் பாராட்டு பெற்ற மாணவர்கள் தங்களின் அறிவுத் திறனை மேலும் மேம்படுத்தலாம் என்று நினைக்கின்றனர். மாணவர்கள், திறமையற்றதால் தோல்வியுற்றார்கள் எனக் கருதாமல், அவர்கள் தோல்வியுறும் போதெல்லாம் வெவ்வேறு உத்திகளை அல்லது நடவடிக்கைகளை கையாளவேண்டும் என்பது தெளிவாகிறது.
இந்தக் கட்டுரையின் வழி ஒருவருக்கு முடிவுபெற்ற மனப்போக்கும் (Fixed Mindset) தொடர் மனப்போக்கும் (Growth Mindset) உள்ளன என அறிய முடிகிறது. (Dweck, 2012. Mindset: How you can fulfill your potential)
இந்த அறிவாற்றலை நாம் எப்படிச் செயல்படுத்துவது?
- திறமைக்காகவும் வெற்றிக்காகவும் பாராட்டுவது சிறப்பானதாகும். ஆனால், மேலும் முயற்சி செய்வதில் ஈடுபாடு காட்ட வேண்டும். எடுத்துக்காட்டாக, “உங்களிடம் முன்னேற்றம் காணமுடிகிறது” அல்லது “உங்களின் பெருமுயற்சியைக் கண்டு பெருமை அடைகிறோம்” என்று பாராட்டவேண்டும்.
- நம்முடைய திறமைக்கு எல்லை இல்லை என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதனை முயற்சியால் மேலும் மேம்படுத்த முடியும். எடுத்துக்காட்டுக்கு, “நான் இந்த விளையாட்டில் திறமையற்றவன்” என்பது முடிவுபெற்ற மனப்போக்கு உடையவர்கள் கூறுவது. “என்னால் இன்னும் இந்த விளையாட்டைச் சிறப்பாக விளையாட முடியவில்லை ஆனால் முயன்றால் நான் நிச்சயமாக வெற்றி அடைவேன்” என்பது தொடர் மனப்போக்கு உடையவர்கள் கூறும் கூற்றாகும்.
- ஒருவரின் தோல்வியைக் கண்டு அவர்களை அவமானப்படுத்தக் கூடாது. தோல்வி அனைவருக்கும் ஏற்படும் பொதுவானது. நீங்கள் தோல்வி அடையும்போதெல்லாம் அதனை வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகத் கருத வேண்டும். (எடுத்துக்காட்டுக்கு, ‘’நீங்கள் எதிர்பார்த்த முடிவு இதுதானா? என்ன தவறு நிகழ்ந்தது? நீங்கள் இதில் எப்படி உங்களை மேம்படுத்தலாம்?’’)
- தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதைப் பெருமையாக கருத வேண்டும். அதோடு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆகவே, தொடர் மனப்போக்குதான் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் பயனாக அமையும்.
சிவா சோதிநாதன்
உமா பதிப்பகத்தின் மேலாளர். கல்வி, சுய வளர்ச்சி, உளவியல், தத்துவம், இசை ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.
Leave a Reply
You must be logged in to post a comment.